ஏதிரணிகள் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுத்துக் கொண்டுவருகின்றபோதும் அதற்கான ஏற்பாடுகள் எவையும் அரசியலமைப்பில் இல்லை. மாறாக தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகளே அரசியலமைப்பில் காணப்படுகின்றன என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, ஆகியன போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மீளக் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் வெற்றி கண்டுள்ளதாக கூறப்படுவதை எப்படி பார்க்கின்றீர்கள்?
பதில்:- தன்னெழுச்சிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, இந்தப் போராட்டம் வெற்றியளிக்குமா என்ற கேள்வியும், போராட்டங்கள் தீவிரமடைகின்றபோது மோசமான வன்முறைகள் ஏற்படுமா என்ற அச்சமும் என்னுள் காணப்பட்டது.
ஆனால் போராட்டம் பெருமளவிற்கு வெற்றி பெற்று விட்டது. இதற்கு அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய இரண்டும் காரணங்களாக அமைந்தன.
போராட்டக்காரர்கள் வன்முறைகளை ஆதரிப்பவர்களாக இல்லாத நிலையிலும் துரதிஷ்டவசமாக சில சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த வன்முறைகளை ஏற்க முடியாது. வன்முறையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.
மக்கள் ஆர்ப்பாட்டம் மூலம் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை பதவி விலகச் செய்தது இலங்கை வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் முக்கிய சம்பவமாக இடம் பெற்றுள்ளது.
நாட்டின் அரசியலமைப்பின் உறுப்புரை 38(2) இல் ஜனாபதியை அரசியலமைப்பு ரீதியாக பதவி விலக்குவது பற்றிய ஏற்பாடு உள்ளது. ஆனால், சாத்தியமற்ற ஒரு நடபடி முறையைக் கொண்ட ஏற்பாடாகவே இது உள்ளது. அரசியலமைப்பில் உள்ள குறைபாடு காரணமாக தான் மக்கள் எழுச்சிப்போராட்டம் அவசியமாக மாறியதோடு, நியாயப்படுத்தக்கூடியதொன்றாகவும் அமைந்தது. ஆனால், நாட்டில் மாற்றங்கள் அவசியமாகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது சாத்தியமற்றதும் பொருத்தமற்றதும் ஆகும். மாற்றங்கள் சட்ட வழியில் அரசியலமைப்பு வழியில் ஏற்படுதல் வேண்டும். இதற்கமைய நாட்டின் அரசியலமைப்பும் ஆக்கப்படுதல் வேண்டும்.
கேள்வி: ஜனாதிபதி நாட்டை விட்டுச் செல்லும் போது பதில் ஜனாதிபதியாக பிரதமரை நியமிக்க முடியுமா?
பதில்: ஆம். அரசியலமைப்பில் உறுப்புரை 37(1) இது பற்றி ஏற்பாடு செய்கின்றது. ஜனாதிபதி தான் நாட்டை விட்டு செல்கின்ற போது தனது பணிகளைப் புரிவதற்காக பதில் ஜனாதிபதியாக பிரதமரை நியமிக்கலாம். பிரதமர் பதவி விலகி இருந்தால் மட்டுமே இப் பொறுப்புகளை சபாநாயகரிடம் ஒப்படைத்தல் வேண்டும். ஜனாதிபதி நாட்டிற்கு திரும்பி வரும் வரை பதில் ஜனாதிபதி கடமைகளைப் புரிவார்.
கேள்வி:- ஜனாதிபதி பதவி விலகும்போது பின்பற்ற வேண்டிய அரசியலமைப்பு நடைமுறை என்ன?
பதில்:- அரசியலமைப்பின் உறுப்புரை 38(1)(ஆ) இன் படி ஜனாதிபதி எழுத்துமூலமாக சபாநாயகருக்கு அறிவித்து பதவி விலகுதல் வேண்டும். ஒருவர் ஜனாபதியாக பதவி வகிக்கின்ற காலத்தில் அவருக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளை கொண்டு வர முடியாது என அரசியலமைப்பின் உறுப்புரை 35(1) இல் உள்ளது. ஜனாபதி பதவி விலகிய பின்னர் இந்த சட்டப் பாதுகாப்பு பதவி விலகிய ஜனாதிபதிக்கு இருக்க மாட்டாது. எனவே தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய ஒரு சூழ்நிலை வருகின்ற போது வெளிநாடு ஒன்றிற்கு சென்று அங்கிருந்து கொண்டு பதவி விலகல் கடிதத்தை அனுப்புவார் என்பது முன்னரே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.
கேள்வி:- ஜனாதிபதி பதவி விலகும்போது பின்பற்றப்பட வேண்டிய அரசியலமைப்பு நடைமுறைகள் என்ன? அவை முறையாக தற்போது வரையில் பின்பற்றப்படுகின்றனவா?
பதில்:-;. ஜனாதிபதி பதவி விலகும் போதான நடைமுறை பற்றி அரசியலமைப்பின் உறுப்புரை 40(1) இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பிரதமராக உள்ளவர் தற்காலிக ஜனாதிபதியாக கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும்.
பிரதமர், பதவி விலகி இருந்தால் அல்லது ஜனாதிபதியின் பொறுப்புக்களை ஏற்கமுடியாதவராக இருந்தால் மட்டுமே சபாநாயகர் ஜனாதிபதியின் பொறுப்புக்களை தற்காலிகமாக ஏற்றுக்கொள்வார்.
அவ்வாறு தற்காலிக பதவியை ஏற்பவர் ஆகக்கூடுதலாக ஒரு மாதத்திற்கே அப்பதவியில் நீடிக்க முடியும். அந்த ஒருமாத காலப்பகுதிக்குள் பாராளுமன்றம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர், பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகவோ அல்லது ஏற்கனவே தற்காலிக பதவியை ஏற்றுள்ள ஜனாபதியாகவோ அல்லது தற்காலிக பிரதமராகவோ அல்லது சபாநாயகராகவோ இருக்கலாம். அவ்விதமாக தெரிவு செய்யப்படுபவர், பதவி விலகிய ஜனாதிபதியின் எஞ்சிய காலத்திற்கு பதவியில் நீடிப்பார்.
கேள்வி:- ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் முன்மொழியப்பட்டுள்ளார். சுயாதீன தரப்பில் டலஸ் நிறுத்தப்படலாம் என்று கருதப்படுகின்றது. இதனைவிட தற்காலிக ஜனாதிபதி ரணிலும் களத்தில் பொதுஜன பெரமுனவால் இறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கபடுகின்றது. இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் தெரிவு எவ்வாறு நடைபெறும்?
பதில்:- பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். அதற்கான பொறுப்பை பாராளுமன்ற செயலாளர் நாயகமே வகிப்பார். அவர் தலைமையில் நடைபெறும் வாக்கெடுப்பில் சபையில் பிரசன்னமாகி இருப்பவர்கள் வாக்களிப்பார்கள். வாக்களிப்பில் பங்கேற்பவர்கள் நேரடியாக சமூகமளிக்க வேண்டியது அவசியமாகும்.
அதில் அளிக்கப்பட்ட வாக்குகளில் அரைவாசிக்கு மேல் பெறுபவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். இது பற்றிய ஏற்பாடுகள் அரசியலமைப்பின் உறுப்புரை 40(1) இல் உள்ளது. இதன்படி பாராளுமன்ற மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையை தெரிவாகுபவர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டம் ஆகியவற்றில் இவ்விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
இரண்டிற்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் சில வேளைகளில் எந்தவொருவருக்கும் அளிக்கப்பட்ட வாக்குகளில் அரைப்பங்கிற்கு அதிகமான வாக்குகளைப் பெறுவது இயலாத விடயமாக ஆகலாம். இவ்வாறான நிலையில் விசேட ஏற்பாடுகள் சட்டத்தில் அதற்கான முறைமையொன்று குறித்துரைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக மூவர் போட்டியிடுவதாக வைத்துக்கொண்டால், அவர்களில் ஆகக்குறைந்த வாக்குகளைப் பெற்றுக்கொள்பவர் நீக்கப்பட்டு, அவருக்கு வாக்குகளை அளித்தவர்களின் இரண்டாவது விருப்பு வாக்கு முன்னிலையில் உள்ள இருவரில் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருந்தால் அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளுடன் சேர்த்து கூட்டப்படும். இவ்வாறு கூட்டப்பட்டு ஆகக் கூடிய வாக்குகளை பெறுபவர் முந்தைய ஜனாதிபதியின் எஞ்சிய காலத்திற்கு பதவி வகிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
கேள்வி:- அரசியமைப்பின் பிரகாரம் மக்களிடத்தில் இறைமை உள்ள நிலையில் மக்களால் நிராகாரிக்கப்பட்டவராக கருதப்படும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எஞ்சிய காலத்திற்கு ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட முடியுமா?
பதில்:- அரசியலமைப்பின் பிரகாரம் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால் மக்களிடத்தில் இறைமை உள்ள நிலையில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஜனாதிபதி பதவியில் நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியானதா என்ற தர்க்கமுள்ளது. எனது கருத்தில் இன்று நாடு உள்ள நிலையில் மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது பொருளாதார பிரச்சினை. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் புதிய ஜனாதிபதி ஊழல் மோசடி அற்றவராக தூய கரங்களுடன் வந்தால் மட்டும் போதாது. நாட்டில் உள்ள மோசமான பொருளாதார பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க கூடிய அறிவு, அனுபவம் மற்றும் ஆற்றல் உள்ளவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.
கேள்வி:- சமகாலத்தில் ‘சர்வகட்சி இடைக்கால அரசாங்கம்’ அமைப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் நடைமுறை எவ்வாறு அமையும்?
பதில்:- அரசியலமைப்பில் ‘சர்வகட்சி இடைக்கால அரசாங்கம்’ என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை. ‘தேசிய அரசாங்கம்’ அமைப்பதற்கான ஏற்பாடுகளே காணப்படுகின்றன. அக்கூடிய வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழு ஏனைய கட்சிகளுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைக்க முடியும் என்றே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதற்கான தடை ஏதும் அரசியலமைப்பில் இல்லை.
கேள்வி:- அப்படியென்றால் ‘சர்வகட்சி இடைக்கால அரசாங்கம்’ அமைப்பது பற்றிய பேச்சுக்கள் எந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன?
பதில்:- இலங்கiயின் அரசியல் சம்பிரதாயத்தில் ‘சர்வகட்சி இடைக்கால அரசாங்கம்’ என்ற விடயம் புதியதாகவே இருக்கப்போகின்றது. சர்வ கட்சி அரசாங்கத்தில் எல்லா கட்சிகளும் பங்கேற்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், பெரும்பாலான கட்சிகளின் ஆதரவுடன் இது முன்னெடுக்கப்படலாம்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் தனியொருகட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து நாட்டை நிருவகிக்க முடியாத நிலையில் வெவ்வேறு கொள்கைகளை உடைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது மிகவும் சவாலான விடயமாகும்.
குறிப்பாக, அரசியல் கட்சிகளும், தனி நபர்களும் தங்களையே முன்னிலைப்படுத்தி அரசியல் இலாபம் தேட முற்பட்டால் இந்த சர்வ கட்சி அரசாங்கம் என்பது தோல்வி கண்ட ஒன்றாகி விடும். அவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் தேர்தலுக்கு செல்வது தவிர்க்க முடியாததாக ஆகி விடும்.
கேள்வி:- ராஜபக்ஷக்கள் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் வெளியேற வேண்டும் என்ற கோசங்கள் வலுவடைந்து வருகின்றவே?
பதில்:- போராட்டக்காரர்கள் நாட்டில் நல்லாட்சி ஏற்பட வேண்டும், புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், ராஜபக்ஷகள் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. ஆனால் அதற்கு பின்னர் ஆட்சியில் அமரப்போகின்றவர்கள் யார் என்பதை மிகச் சரியாக தீர்மானிக்க வேண்டும்.
ஏனென்றால், வெறுமனே அரசியல் நெருக்கடிகளுக்கு அப்பால் பொருளாதார நெருக்கடிகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வுகள் எட்டப்பட வேண்டும். அதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. ஆகவே மிக கவனமாக நிலைமைகளை கையாள வேண்டியுள்ளது.
கேள்வி:- தேசிய அரசியலில் ஆட்சிமாற்றமொன்று நிகழப்போகின்ற நிலையில் அந்தச் சூழலை தமிழ்த் தரப்பு எவ்வாறு கையாள வேண்டும்?
பதில்:- தமிழ்மக்கள் இந்த நாட்டின் பிரஜைகளே. அந்த வகையில் நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகின்றபோதும், சர்வாதிகார ஆட்சியால் நெருக்கடிகள் ஏற்படுகின்ற போதும் தனியே பெரும்பான்மை சிங்கள மக்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அனைவரும் பாதிக்கப்படுகின்றார்கள். ஆகவே மாற்றங்களை ஏற்படுத்துகின்றபோது அதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களின் அடையாளங்களுடன் பங்கேற்பது அவசியமாகும்.
அதேநேரம், தமிழ் அரசியல் தரப்பினர்கள் தந்திரோபாயமாக செயற்பட வேண்டும். அடுத்து அமைகின்ற அரசாங்கத்திடம் அரசியலமைப்பில் காணப்படுகின்ற மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துதல், 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைச்சாத்தியமாக்குதல் உள்ளிட்ட விடயங்களை முன்னெடுத்தல் வேண்டும்.
அத்துடன், வெறுமனே பிச்சைப்பாத்திரங்களை ஏந்திச் செல்வதை தவிர்க்கும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை, உள்நாட்டு முதலீடுகளை மற்றும் உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக, மாகாண சபைகளின் அதிகாரங்களை முழுமையாக வழங்கி மாகாண மட்டத்திலான அபிவிருத்திகளையும் முன்னெடுத்தல் வேண்டும்.
கேள்வி:- அடுத்து அமைகின்ற இடைக்கால அரசாங்கத்தினுடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்று அதிகாரத்தினை குறைப்பதை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு திருத்தம், புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் சாத்தியமாகுமா?
பதில்:- நிறைவேற்று அதிகாரத்தினை முற்றாக ஒழிக்க வேண்டுமென்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் 21ஆவது திருத்த முன்மொழிவின் சில ஏற்பாடுகளுக்கு சர்வஜனவாக்கெடுப்பு அவசியம் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நீதி அமைச்சர் கலாநிதி.விஜயதாச ராஜபக்ஷ 22ஆவது திருத்தத்திற்கான முன்மொழிவு வரைவினை பாராளுமன்றிற்கு சமர்ப்பித்துள்ளார். இது ஏற்கனவே இருக்கும் 19ஆவது திருத்தத்தை மீள கொண்டு வருகின்ற ஒரு முயற்சியாக அமைந்துள்ளது.
இன்றுள்ள முக்கிய கோரிக்கையாக உள்ளது நாட்டில் நல்லாட்சி ஏற்படுதல் வேண்டும், சுதந்திர ஆணைக் குழுக்கள் அமைதல் வேண்டும் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதாக்கப்படுதல் வேண்டும் போன்றவை உள்ளன. இதனை விட தமிழ் மக்களின் கோரிக்கையாக இனப்பிரச்சினை தீர்வு என்பது உள்ளது.
அவ்வாறான நிலையில் 21,22ஆகிய திருத்தங்களை கைவிட்டு புதிய அரசியலமைப்பு ஒன்றுக்குச் செல்வதே பொருத்தமானது. அதன்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பரந்துபட்ட கலந்துரையாடலுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இடைக்கால அரசாங்கமாக அமைகின்ற சர்வகட்சி அரசாங்கம் தன்னைக் கொண்டு போகுமா என்ற சந்தேகம் உள்ள போது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பெரிதாக எதிர்பார்க்க முடியாதுள்ளது.
இடைக்கால அரசாங்கமாக இருந்தாலென்ன அல்லது புதிய அரசாங்கமாக இருந்தாலென்ன புதிய அரசியலமைப்பிற்கு செல்வதாக இருந்தால் இனப்பிரச்சினை தீர்வு உள்ளடக்கப்பட்டதாக அது அமைதல் வேண்டும்.


0 Comments