
உலகப் புகழ்பெற்ற பிரித்தானிய ஓட்ட வீரர் மோ பராஹ், தான் சிறு வயதில் போலி ஆவணம் மூலம் சட்டவிரோதமாக பிரிட்டனுக்கு கடத்தி வரப்பட்டதாக தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து தான் நிம்மதியடைவதாக சேர் மோ பராஹ் தெரிவித்துள்ளார்.

தற்போது 39 வயதான மோ பராஹ் (மொஹமத் பராஹ்) 2012, 2016 ஆம் ஆண்டுகளின் ஒலிம்பிக் போட்டிகளில் 5,000 மீற்றர் ஓட்டம், 10,000 மீற்றர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை வென்றார். அத்துடன் உலக சம்பியன்ஷிப் போட்டிகளிலும் 6 தங்கப் பதக்கங்களை அவர் வென்றார்.

சோமாலியாவில் பிறந்த மோ பராஹ்வுக்கு பிரித்தானிய அரசு சேர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில், பிபிசிக்கு அவர் அளித்த செவ்வியில், தான் 9 வயதில் சட்டவிரோதமாக பிரிட்டனுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தனது பெயர் மொஹம்மத் பராஹ் அல்ல எனவும், தனது உண்மையான பெயர் ஹுசெய்ன் ஆப்தி காஹின் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோ பராஹ் பிறந்த ஊர் தற்போது சோமாலிலாந்து எனக் குறிப்பிடப்படும் பிரதேசத்தில் உள்ளது. சோமாலியாவிலிருந்து பிரிந்து செல்வதாக 1991 ஆம் ஆண்டு சோமாலிலாந்து அறிவித்தது. எனினும் எந்த நாடும் அதை அங்கீகரிக்கவில்லை.
இந்நிலையில் பிபிசி ஆவணப்படமொன்றில் பேசியுள்ள சேர் மோ பராஹ், தனக்கு 4 வயதானபோது, தனது தந்தை சோமாலிய யுத்த்தில் இறந்ததாக தெரிவித்துள்ளார்
தனக்கு 9 வயதான போது அறிமுகமில்லாத பெண் ஒருவர் மூலம் பிரிட்டனுக்கு அழைத்து வரப்பட்டதாக மோ பராஹ் கூறியுள்ளார்.
“மொஹம்மத் பராஹ் எனும் பெயரிலுள்ள ஆவணத்தில் எனது படம் ஒட்டப்பட்ட ஆவணத்தை வைத்திருந்த அப்பெண், எனது பெயர் மொஹம்மத் எனக் கூற வேண்டும் என அறிவுறுத்தினார்” என மோ பராஹ் தெரிவித்துள்ளார்.
“ஐரோப்பாவிலுள்ள உறவினர்களிடம் என்னை அழைத்துச் செல்வதாக அப்பெண் கூறினார். அதனால், நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதற்குமுன் நான் விமானத்தில் ஏறியதில்லை.
ஆனால், பிரிட்டனுக்கு வந்தபின், மேற்கு லண்டனிலுள்ள தனது வீட்டுக்கு அப்பெண்; என்னை அழைத்துச் சென்றார்.
அங்கு நான் வீட்டு வேலைகளை செய்வதுடன் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டியிருந்தது. பல நாட்கள் நான் குளியலறைக்குச் சென்று நான் அழுதிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
12 வயதானபோது தான் பாடசாலை செல்ல அக்குடும்பத்தினரால் அனுமதிக்கப்பட்டதாகவும் சேர் மோ பராஹ் தெரிவித்தார்.
தான் போலி ஆவணத்தில் சட்டவிரோதமாக பிரிட்டனுக்கு வந்தமை குறித்து பராஹ் தெரிவித்த பின்னர் அவரின் பிரித்தானிய குடியுரிமை பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
எனினும், அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது என பிரித்தானிய உள்துறை அமைச்சு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினால் தான் நிம்மதியடைவதாக சேர் மோ பராஹ் தெரிவித்துள்ளார்.

0 Comments