ஆர்ப்பாட்டங்களை செய்வதன் மூலம் தீர்வு காண முடியாது
நாட்டின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.
பாராளுமன்றத்தில் 225பேரும் பிரிந்து நின்று ஒருவரையொருவர் விரல் நீட்டி செயற்பட்டு மக்கள் எதிர்பார்க்கும் எதனையும் மேற்கொள்ள முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் கொள்வனவு பெரும் சவாலாகியுள்ள நிலையில் மாதாந்தம் எரிபொருள் கொள்வனவுக்காக 500மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் 8ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ள எரிபொருள் கப்பலுக்கான நிதியை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பாக உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
நெருக்கடி நிலைமைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். உரிய தீர்வுகளை உரிய காலத்தில் எடுக்காமையும் இந்த நெருக்கடிக்கு காரணமாகும்.
எரிபொருளை ஆடர் செய்வதும் அமைச்சர் அல்லது பிரதமரின் வேலையென அவர்கள் நினைக்கின்றனர்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் வரை எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எரிபொருள் சுத்திகரிப்பை நிறுத்துவது எமது நோக்கமல்ல. அதேபோன்று எதிர்காலத்தில் திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள பகுதியில் புதிய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மாதாந்தம் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக நாம் 500மில்லியன் டொலரை தேட வேண்டியுள்ளது.
இம்மாதம் எரிபொருளுக்காக 129மில்லியன் டொலர்களே கையிருப்பில் உள்ளது. நிதியைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
வீதிகளில் இறங்கி போராட்டம் செய்வதால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வருகை தந்த பேச்சு வார்த்தைகள் மேற்கொண்ட சந்தர்ப்பத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
0 Comments