
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்குமென, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் சி.கே. அளஹகோன் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகத் தடைகள் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து பிரச்சினைகளால், இத்திணைக்கள அதிகாரிகள் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் தனியார் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே, பொது நிர்வாக சுற்றறிக்கைகள் 15/2022, 16/2022, 16/2022 (I) மற்றும் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளரின் ஜூன் 06 ஆம் திகதியிடப்பட்ட கடித இலக்கம் PUBADM/SEC/07 இற்கு அமைய குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், திணைக்களம் இவ்வாரம் வெள்ளிக்கிழமை (15) திறக்கப்படும் எனவும், அடுத்த வாரம் முதல் மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளிக்கிழமைகளில் திணைக்களம் மூடப்படும் எனவும், பொது விடுமுறை தவிர, அனைத்து வேலை நாட்களிலும் திறந்திருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது சேவைகள் தொடர்பான தெளிவுகளுக்கு, வேலை நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.00 மணி வரை பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.வாகனப் பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்களுக்கு - 070 7 677 877
சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு - 070 7 677 977
அலுவலக நேரங்கள் தவிர்ந்த வேளைகளில் மேற்படி இலக்கங்கள் ஊடாக WhatsApp/ Viber/ SMS மூலம் உங்கள் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

0 Comments