
தொற்று நோய்களுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக முதலீடுகளுக்கு நிதி அளிக்கும் நிதியம் ஒன்றை உருவாக்க உலக வங்கியின் நிர்வாக சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதியம் கீழ் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நோய் தடுப்பு, தயார்நிலை மற்றும் பதில் நடவடிக்கைகளுக்கு உதவும் என்று உலக வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
‘கொவிட்-19 மனித, பொருளாதார மற்றும் சமூக இழப்புகளை ஏற்படுத்திய நிலையில் அது வலுவான சுகாதார முறைகளை கட்டியெழுப்புவது மற்றும் மேலதிக வளங்களை குவிப்பதற்கு கூட்டு நடவடிக்கையின் தேவையை காட்டுவதாக உள்ளது’ என்று கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் இந்த நிதியம் ஜி20 நாடுகளின் தலைமைத்துவத்தின் ஓர் அங்கமாக அமெரிக்கா, இத்தாலி மற்றும் இந்தோனேசியாவின் தலைமையில் உருவாக்கப்படவுள்ளது.
ஏற்கனவே 1 பில்லியன் டொலருக்கான உறுதிமொழி இந்த நிதியத்திற்கு கிடைத்திருப்பதோடு அந்தப் பணம் நோய் கண்காணிப்பு உட்பட பல விடயங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ஒரு பங்காளியாக உள்ள உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்ப நிபுணர்களை வழங்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் குறிப்பிட்டார்.

0 Comments